விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை என்பதால் பொதுமக்கள் குறைவு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் ஏராளமான ஒரு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மனுவை கொடுக்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமைகள் அனைத்தும் நுழைவாயில் அருகே காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்ட பிறகு தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு முதியவர், தான் கேனில் எடுத்து வந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீப்பிடிக்க முயற்சி செய்தார் அங்கு இருந்தவர்கள் ஓடி சென்று பெட்ரோல் கேனை பிடுங்கி முதியவரை மீட்டனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்துவிட்டு முதியவரிடம் விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடியைச் சேர்ந்த சின்னத்தம்பி(78) என்ற நபர் என்பதும் சென்னையில் பள்ளிக்கல்வித்துறையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தான் இவர் என்றும் தெரியவந்தது.
அதோடு, இது குறித்து சின்ன தம்பி தெரிவித்ததாவது, சென்ற 1983 ஆம் வருடம் சாத்தூரில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கினேன். தற்போது அந்த வீட்டில் வழக்கறிஞராக இருக்கின்ற தன்னுடைய மூத்த மகன் சிவகுமார் அந்த வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு என்னை துரத்துகிறார் எனவும், என்னுடைய வீட்டை மீட்டுத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இது குறித்து வருவாய்த்துறை, காவல்துறை போன்ற பல இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, சூலக்கரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சின்ன தம்பியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.