இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் இணைப்பு மூலமாக மோசடிகள் தடுக்கப்படும் என்றும் ஆதார் மூலமாக சம்பள பரிமாற்றம் குறித்து மத்திய ஊரக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 100% நேரடி பயன் பரிமாற்றக் கணக்கை ஆதாருடன் இணைக்க மாநிலங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்து பயனாளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
பணிக்கு வரும் ஊழியர்களிடம் ஆதார் எண்ணை வழங்க அறிவுறுத்த வேண்டும். அப்படி வழங்காமல் இருந்தால் பணி வழங்காமல் இருக்கக் கூடாது. தொழிலாளி எபிபிஸ்க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது. இத்திட்டத்தின் மூலம் ஆதார் அடிப்படையிலான கட்டண பரிமாற்ற முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.