ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவாரத்தலம் ஆகும். இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர் வலமாகவே சுற்றி வர வேண்டும். இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்வதாகவும், அந்த செல்போன்களை பயன்படுத்தி கோவில் வளாகத்தில் வீடியோ, புகைப்படம் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தவிர கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரும் செல்போன்களை எடுத்துச் சென்று பேசுகின்றனர். இதனால் பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆகையால், கோவிலுக்குள் இனிமேல் யாராவது செல்போனை எடுத்துச் சென்று பிடிபட்டால் அவர்களுக்கு 5,000 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்ட தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.