உணர்ச்சிகளின் ஆரம்பகட்ட வளர்ச்சியை நம்முடைய குழந்தைப்பருவம் தான் பிரதிபலிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நமக்கு ஏற்படக்கூடிய மனக் காயங்கள், காலம் முழுவதும் நம் கூடவே இருக்கும். இப்படி குழந்தைப்பருவத்தின் தீர்க்கப்படாத உள் மன காயங்கள், நாம் பெரியவர்கள் ஆனதும் நம்முடைய உறவில் வெளிப்படும் போது, நமது நடத்தையிலும், உணர்ச்சியிலும், அடுத்தவர்களோடு உரையாடுவதிலும் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் நிறைவாகவும் வாழ வேண்டுமென்றால், இந்தக் காயங்களை ஆற்றுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
சிறுவயதில் உங்களை யாராவது புறக்கணித்தாலோ, கைவிட்டாலோ அல்லது உணர்வுரீதியான ஆதரவை வழங்காமல் இருந்தாலோ, இதுபோன்ற காயங்கள் உங்கள் மனதில் எழும். இத்தகைய காயங்கள் உள்ளவர்கள் பெரியவர்கள் ஆனதும் தங்கள் துணையால் கைவிடப்பட்டுவிடுவோமோ என எப்போதும் பயந்தபடியே இருப்பார்கள். இந்த பயத்தின் காரணமாக உறவில் அதிகப்படியான பாசத்தை வெளிப்படுத்துவார்கள். தன்னை மீண்டும் கைவிட்டுப் போய்விடுவார்களோ என்ற பதட்டத்தை போக்குவதற்காக, அடிக்கடி தன் மீதிருக்கும் அன்பை உறுதிப்படுத்தும்படி கூறுவார்கள்.
சிறுவயதில் தன் மீது யாரும் அன்பு காட்டாத அல்லது யாராலும் விரும்பப்படாத நபர்களின் மனதிற்குள் நிராகரிப்பின் வலி ஆழமாக பதிந்துள்ளது. இவர்களிடம் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு குறைவாகவே இருக்கும். எல்லாவற்றுக்கு தங்கள் துணையிடம் அனுமதி கோருவார்கள். தன்னை நிராகரிக்கிறார்கள் என்ற சிறு அறிகுறி தெரிந்தாலும் அதிகளவு உணர்ச்சிவசப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
கொடுத்த வாக்குறுதியை மீறுதல் அல்லது நம்பிக்கை மீறல்கள் போன்ற துரோகங்கள் சிறுவயதில் ஏற்பட்டதால், பெரியவர்கள் ஆனதும் அடுத்தவர்கள் மீது நம்பிக்கை வைப்பதில் பிரச்சனை வருகிறது. மீண்டும் இதுபோல் நமக்கு காயங்களை ஏற்படுத்துவார்கள் என்பதால், இப்படியான பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் இணையை முழுதும் நம்பமாட்டர்கள். இதனால் இருவருக்கிடையேயான உறவில் நெருக்கம் ஏற்படாது. எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும்.