ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தங்கள் மாத ஓய்வூதியத்தை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக பெறுவதற்கு ஆண்டுதோறும் ஜீவன் பிரமான் சான்றிதழ் என அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழ் ஆவணத்தை, வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்பிக்கலாம்.
ஜீவன் பிரமான் சான்றிதழ் என்றால் என்ன..?
ஓய்வூதியத் தொகை பெறுவதற்கு ஓய்வூதியர் உயிரோடுதான் உள்ளார் என்பதை தெரியப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் ஆவணமே ஆயுள் அல்லது வாழ்நாள் சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமான் சான்றிதழ். இதனை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்திற்குள் தவறாமல் சமர்பிக்க வேண்டும். சமர்பிக்க தவறும்பட்சத்தில் உங்களுக்கு பென்ஷன் வழங்கும் வங்கியோ அல்லது தபால் நிலையமோ, உங்களுக்கான ஓய்வூதியத் தொகையை நிறுத்தி வைத்துவிடும்.
பயோமெட்ரிக் மூலம் எப்படி வாழ்க்கை சான்றிதழை உருவாக்குவது..?
ஓய்வூதியர்கள் தங்களது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை மென்பொருள் மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலமாக உருவாக்க முடியும். இந்த சான்றிதழை எப்படி ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
- முதலில் ஜீவன் பிரமான் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
- அந்த செயலியில் உங்கள் லாகின் விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
- பிறகு உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி செயலியை லாகின் செய்யுங்கள்.
- டாஷ்போர்டில் ‘ஜெனரேட் ஜீவன் பிரமான்’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்து, உங்கள் ஆதார், மொபைல் எண் போன்ற விவரங்களை நிரப்புங்கள்.
- பின்னர் ஓடிபி ஜெனரேட் செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிடுங்கள்.
- ஓடிபி சரிபார்ப்பிற்கு பின், உங்களின் PPO எண் போன்ற தேவையான விவரங்களை பதிவிடுங்கள்.
- பிறகு, உங்களது விரல் ரேகை /அல்லது கண் விழியை ஸ்கேன் செய்து ஆதார் தகவல்களை பயன்படுத்த அனுமதி கொடுங்கள்.
- தற்போது உங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழ் தயாராகிவிட்டது. இதை உறுதி செய்யும் விதமாக உங்களுக்கு மின்னஞ்லோ அல்லது குறுஞ்செய்தியோ வரும்.
ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும்..?
- முதலில் ஆதார் ஃபேஸ் ஐடி செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
- பிறகு ஜீவன் பிரமானின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பயோமெட்ரிக் செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.
- முறையான அங்கீகாரம் பெற்ற பிறகு, ஆபரேட்டரின் முகத்தை ஸ்கேன் செய்து கூறப்பட்ட இடங்களில் தேவையான விவரங்களை நிரப்புங்கள்.
- உங்களது (ஓய்வூதியர்) புகைப்படத்தை நேரடியாக படம்பிடித்து சமர்ப்பியுங்கள்.
- இவையெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்வதற்கான லிங்க் வரும்.