தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ளன. தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மழைக்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நோய்களான டெங்கு, எலி காய்ச்சல் போன்றவற்றின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் அதிகம் காணப்படும் இந்த நோய் பரவல் தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது, கன்னியாகுமரி, தேனி, கோவை போன்ற மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது.
டெங்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொதுசுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தினமும் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை பெற வேண்டும்.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து கண்காணிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குளோரின் கலந்து தண்ணீர் விநியோகம் செய்தல், டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழித்தல், டயர் போன்ற கழிவு பொருட்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறதா? என பார்த்து அது போன்ற பொருட்களை அகற்றுதல், நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல், ஏதாவது ஒரு இடத்தில் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அந்த பணிகளில் கிராமப்புற சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பும் உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் இருந்து செய்யப்படும். இது தவிர மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான மருந்துகள் கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் கொசு உற்பத்தியாவதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.