திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரரான ரவிக்குமார் என்பவர் பன்றிக் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், வாணியம்பாடி நியூ டவுன் மயானத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு, வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு ரவிக்குமாரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, வாணியம்பாடி நகராட்சியில் அவர் மளிகைக்கடை நடத்தி வந்த பகுதியில் இருக்கும் கடைகளை 5 நாட்களுக்கு திறக்க வேண்டாம் என்றும் அப்பகுதி சாலைகள் அனைத்தும் சுத்தப்படுத்தவும் சுகாதர ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரவிக்குமார் வசித்து வந்த பகுதிக்கு மருத்துவக் குழுவினர் செல்ல உள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு பன்றி காய்ச்சல் சோதனை நடத்தப்பட இருக்கிறது. மேலும், அப்பகுதி மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே வரவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.