நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 சேர்க்கப்பட்டதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும். முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும், சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக இந்தியாவில் உள்ள சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன.
அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. அடுத்ததாக ரேசன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்சம் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.