பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மாறும்போது டிசி எனப்படும் மாற்று சான்றிதழ் வழங்கப்படும். அதனை தவிர 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
அந்த சான்றிதழ்களில் எதாவது கறை படியாமல் இருக்கவும், கிழிந்துவிடாமல் இருக்கவும் அதனை பலரும் லேமினேஷன் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஆசிரியர்ளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
அதாவது, அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழை லேமினேட் செய்யாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் போது சான்றிதழ் பின்புறம் அரசு முத்திரை வைக்க முடியும். அந்த நேரத்தில் லேமினேட் செய்வதை பிரித்தால் சான்றிதழ் கிழிந்துவிடும். எனவே, மாணவர்கள் பாதுகாப்பாக அதனை வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.