தமிழகத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வரவுள்ளது. இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனி ஆண்டிற்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்ச வரிசை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற மனநிலையில் மாற்றம் கொண்டு வர, இந்த புதிய மாற்றம் என கூறியிருந்தார்.
தற்போது ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். அதாவது கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்பு ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்களே தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் அச்சமில்லாமல் தேர்வுக்கு வரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு சொல்லப்பட்டது. இது எல்லா ஆண்டுக்கும் பொருந்தாது என தெரிவித்துள்ளார்.