அடுத்த ஆண்டு மார்ச் நடைபெறவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தகுதியான தனித்தேர்வர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தனித்தேர்வராக பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும் அதனுடன் சேர்த்து பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று முத்த ஜனவரி 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி முறையில் (தட்கல்) ஜனவரி 5 முதல் 7-ம் தேதி வரை உரிய தேர்வுக்கட்டணத்துடன் 11,12ஆம் வகுப்புக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாயும், 10ஆம் வகுப்புக்கு ஐந்நூறு ரூபாயும் சிறப்பு கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.