வரி திருப்பிச் செலுத்தும் மோசடி குறித்து வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், வரி செலுத்துவது சம்பந்தமான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மொபைல் போனில் வரும் சந்தேகத்திற்கிடமான வரி தொடர்பான செய்திகளில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த மோசடியில் வரி செலுத்துவோருக்கு வரி கட்டுவது தொடர்பான மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்வதால் போலி வருமான வரி இணையதளத்திற்கு திருப்பி விடப்படுகிறார்கள்.
இணையதளத்தில் தங்கள் வங்கி விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை உள்ளிட்டுவிட்டால், அவை பதிவு செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மோசடி குறித்து https://cybercrime.gov.in என்ற இணையத்தளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று இணைய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.