தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்டு முழுமையான வெளிப்படை தன்மையுடன் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நடத்தப்படும் அனைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான அறிவிப்பை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வெளியிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்ற வருகின்றன.
தற்போது ஏப்ரல் 20ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான முதல் நிலை தேர்வு கணினி மூலமாக காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு குறித்து தங்கள் முதன்மை கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ததற்கான ஒரு ஆவணங்களை சமர்ப்பித்து மேற்கூறிய பணிகளில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.