சமீப காலமாக புற்றுநோயை மிஞ்சும் அளவுக்கு மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இளம் வயதினர் பலர் மரணத்தை சந்தித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் அதிக இறப்புக்கு மாரடைப்பு தான் முக்கிய காரணமாக கூறுகிறது. இந்த மாரடைப்பு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றால் தான் வருகிறது.
ஆனால், மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால், சில நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே அறிகுறிகள் தெரியும் என இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்து, மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
அதிக வியர்வை
ஒருவருக்கு வழக்கத்தை விட அதிகமாக வியர்த்தால், எந்த ஒரு வேலையையும் செய்யாமல் அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அது வரவிருக்கும் மாரடைப்பின் ஆரம்ப கால எச்சரிக்கையாக இருக்கலாம். எனவே, இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்,உடனே கவனம் செலுத்துங்கள்.
கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
இளம் வயது பெண்கள் காரணமின்றி கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலியை அதிகம் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால், பெண்களுக்கு மாரடைப்பின் போது நெஞ்சு வலியை விட கழுத்து, தாடை, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தான் அதிக வலி இருக்கும்.
நெஞ்சு வலி
திடீரென்று நெஞ்சு பகுதியில் வலி அல்லது இறுக்கத்தை சந்திக்க நேரிட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் மாரடைப்பின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம்.
கைகளில் கூர்மையான வலி
நிறைய பேர் கைகளில் கூர்மையான வலியை அனுபவிக்கின்றனர். ஆனால், சில சமயங்களில் இந்த வலி பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் கைகளில் வலி தொடங்கி, அந்த வலி தாடை, கழுத்து வரை பரவினால் அது மாரடைப்புக்கான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
மாரடைப்பு வராமல் தவிர்க்க என்ன செய்யலாம்..?
* இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரியுங்கள். மது மற்றும் புகைப்பிடிப்பதை கைவிடுங்கள். தினமும் 7-8 மணிநேரம் நன்றாக தூங்குங்கள்.
* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். அதோடு புரோட்டீன் உணவுகளான நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது.
* மன அழுத்தம் ஒருவரது இதய ஆரோக்கியத்தை பாழாக்கும் என்பதால், மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க யோகா, தியானம் போன்றவற்றை தினமும் தவறாமல் கடைபிடித்தால் உங்களுக்கு மாரடைப்பு வராது.