கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது பலர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
மாபெரும் இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் சுமார் 287 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதோடு, 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பின்பு இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கி வந்த நிலையில், உயிரிசத்தவர்களின் உடல்களை அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை மாநில அரசு செய்து வந்தது. இது ஒருபுறமிருக்க இன்னொரு புறம் விபத்து நடைபெற்ற பகுதிகளில் சிதறி கிடந்த ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளை மத்திய அரசு கையில் எடுத்து அந்த பணிகளை துரிதப்படுத்தியது.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர். ஆகவே 81 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வரில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் வைய்க்கப் பட்டிருந்தது.
அதோடு, ஒரு சடலத்திற்கு பல குடும்பங்கள் உரிமை கூறியதால் மரபணு பரிசோதனை செய்து அதன் மூலமாக உடல்களை அடையாளம் கண்டு ஒப்படைக்க ரயில்வே துறையும், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகமும் முடிவு செய்தது.
அதன்படி எல்லோருக்கும் மரபணு பரிசோதனை செய்யப்பட்டு, இதுவரையில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இரண்டாம் கட்ட மரபணு மாதிரிகள் டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதன் முடிவுகள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்து இருக்கிறது. அதன் பிறகு உரிமை கோராமல் மீதமிருக்கும் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக மாநில அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.