இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.7 ரன்களுடன் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்கள். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் ஒல்லி ராபின்சன் 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது. அணியின் ஸ்கோர் 61 ஆக இருந்தபோது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும்,; ஸ்மித் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்பட்டது.இந்நிலையில், மழை குறுக்கிட்டதால் கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.சிறப்பாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அலெக்ஸ் கேரி 20 ரன்களுக்கு வெளியேறினார்.
இறுதியில் பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும் எடுத்தனர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 92.3 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்டு பிராட் 3 விக்கெட்களும், ராபின்சன் 2 விக்கெட்களும், மொயின் அலி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் வருகிற 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.