ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸி., அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியுடன் 5800 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். மேலும் 28 விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஸ்மித் வீழ்த்தியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் : 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் ஸ்மித் இடம்பெற்றார். 2015 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பேட் கம்மின்ஸ் காயமடைந்து விளையாட முடியாமல் போனதால், இடைக்கால கேப்டன் பதவியை வகித்தார்.
ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு குறித்து ஸ்மித் கூறுகையில், ” இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. விளையாட்டின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். பல அற்புதமான நேரங்களும் அற்புதமான நினைவுகளும் உள்ளன. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது ஒரு சிறந்த நினைவுகள் ஆகும். அதில் எனது பயணத்தைப் பகிர்ந்து கொண்ட பல அற்புதமான அணி வீரர்களும் இருந்தனர்.
2027 உலகக் கோப்பைக்குத் தயாராகத் தொடங்க மற்ற வீரர்களுக்கு இப்போது ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே அதற்கு வழி வகுத்துக் கொள்ள இதுவே சரியான நேரமாக உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு முன்னுரிமையாக உள்ளது. மேலும் அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அதற்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நான் மிகவும் எதிர்நோக்குகிறேன்.” என உருக்கமாக பேசினார்.
Read more:உலகத்தோடு தொடர்பே இல்லாமல்.. வித்தியாச வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடியின மக்கள்..!!