வீட்டில் ஸ்டைலுக்காக வைத்திருக்கும் ஆட்டோமெட்டிக் டோர் லாக் சிஸ்டத்தால் (Automatic Door Lock System) ஒரு வயது குழந்தை வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதலாவது மாடியில் வசித்து வருபவர் பரத். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு தன்வின் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பாரத்தின் அம்மாவிடம் குழந்தையை விட்டுவிட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் படுக்கை அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்வின், அறையின் கதவை உள்பக்கம் மூடிக்கொண்டது. இதனால் கதவு ஆட்டோ-லாக் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குழந்தை வீட்டுக்குள் அழும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை திறக்க முயற்சி செய்தனர்.

ஆனால், கதவை திறக்க முடியாத நிலையில் உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட வீரர்கள் துரிதமாக செயல்பட்டு ஹைட்ராலிக் கட்டிங் இயந்திரம் மூலம் கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை துரிதமாக மீட்ட தீயணைப்பு மீட்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.