NIA: அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்ட நிகழ்வின் நாளில் பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்த முதன்முதலில் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர் உள்பட 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியை சேர்ந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவீர் உசேன் ஷாஜீத் ஆகியோரை கைது செய்தது.
இந்நிலையில் பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) திங்கள்கிழமை பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாசிப், அப்துல் மதீன் அகமது தாஹா, மாஸ் முனீர் அகமது மற்றும் முஸம்மில் ஷரீப் ஆகியோர் நீதிமன்ற காவலில் உள்ளனர். கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்றும், இதற்கு முன்பு சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பகுதிகளுக்கு ஹிஜ்ரத் செய்ய சதி செய்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டு வைத்த அதே நாளில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜ கட்சியின் தலைமை அலுவலகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்ததாகவும், ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடந்த நாளில் வெடிகுண்டு வைக்கும் அசம்பாவித சம்பவம் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட் டுள்ளது.