அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தை பிறந்து வீடு திரும்பிய அந்தப் பெண், கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் அவர் மருத்துவமனைக்கு விரைந்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளார். அப்போது, வயிற்றில் கத்தரிக்கோல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், இந்த விவகாரம் வெளியே தெரியாமல் மறைக்க மருத்துவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த எக்ஸ்ரேவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்தப் பதிவும் நீக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை விஜயவாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளியே தெரியாமலும் மருத்துவர்கள் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில், வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.