ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், ரேஷன் பொருட்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு, உரிமைத்தொகை பெற விரும்பும் பெண்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடைகள் மூலமாகவும், முகாம்கள் நடத்தியும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே, ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகள் இல்லை. அதனால், உள்ளூர் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். வெளியூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ”உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பயோ மெட்ரிக் கருவி தேவைப்படுவதால், ரேஷன் கடைகளில் இருந்து தற்காலிகமாக வாங்கப்பட்டு உள்ளன. தற்போது பயோ மெட்ரிக் கருவி இல்லாததால் எந்த முகவரியில் கார்டு உள்ளதோ அங்கு தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பயோமெட்ரிக் கருவிகள் மறுபடியும் ரேஷன் கடைகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதனால், இனி வெளியூர் குடும்ப அட்டைதாரர்களும் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2 மாத காலமாகவே, நிறைய பேர் ரேஷன் வாங்காமல் உள்ளனர். இப்போது பயோமெட்ரிக் வந்துவிட்டதால், ரேஷன் பொருட்களை இனி தங்கு தடையின்றி பெற்று கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.