பஹல்காம் தீவிரவாதி ஹசிம் முசா, பாகிஸ்தான் ராணுவத்தின் பணியாற்றியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்த நிலையில், திடீரென அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மொத்தம் 26 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையுமே உலுக்கியுள்ளது. இந்த தீவிரவாத கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
அந்த வகையில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வாஹா – அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என பல கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடந்து வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹசிம் முசா, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாதியான முசா, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்காகவே பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வந்த முசா, லஷ்கர் – இ – தொய்பா இயக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் என இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவிய 14 உள்ளூர் தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2024இல் கந்தர்பால் பயங்கரவாத தாக்குதலும், முசாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றியவருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.