இயற்கைக் காரணங்கள், விபத்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 2018ம் ஆண்டு முதல் மொத்தம் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் நலன், அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, இயற்கை காரணங்கள், விபத்துக்கள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2018 முதல் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் இறந்த 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கனடாவில் 91 இந்திய மாணவர்களும், இங்கிலாந்தில் 48 பேரும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைப்ரஸில் 14 இந்திய மாணவர்களும், பிலிப்பைன்ஸ் மற்றும் இத்தாலியில் தலா 10 பேரும், கத்தார், சீனா மற்றும் கிர்கிஸ்தானில் தலா ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.