Meerut: உத்தர பிரதேசத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சோஹைல் கார்டன், லிசாரி கேட் பகுதியை சேர்ந்தவர் மொயின். இவரது மனைவி அஸ்மா. இந்த தம்பதிக்கு அஃப்சா(8), அஜீசா(4) மற்றும் 1 வயது குழந்தை அதிபா ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில், கடந்த புதன்கிழமை முதல் வீடு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது குழந்தைகள் உட்பட 5 பேரும் கொலை செய்யப்பட்டு சடலங்களாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இவர்களின் கொலைக்கு சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், முதற்கட்ட தகவல்களின்படி, கணவர் மொயின் மற்றும் மனைவி அஸ்மா ஆகியோரின் உடல்கள் தரையில் கண்டெடுக்கப்பட்டன, அதே நேரத்தில் அவர்களின் குழந்தைகளான 8 வயது அஃப்சா, 4 வயது அஜீசா மற்றும் 1 வயது குழந்தைகளின் உடல்கள் பெட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அனைவரது உடல்களிலும் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டப்பின் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், முன் விரோதம் உள்ளிட்டவைகளால் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற பல்வேறு கோணங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்றும் மீரட் எஸ்எஸ்பி தெரிவித்தார்.
Readmore: 102 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது… முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்