புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021 ஏப்ரல் மாதம் மாணவியை வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். அங்கிருந்து அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு வேறொருவர் உடன் பழக்கம் உள்ளதாக கூறி பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசி விட்டுத் தப்பி சென்றார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிரதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிரதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.