பலூசிஸ்தானின் போலானில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தி, பணயக்கைதிகளாகப் பிடித்ததைக் காட்டும் வீடியோவை பலூச் விடுதலைப் படை (BLA) வெளியிட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பலூச் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது. பிணைக் கைதிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அந்த குழு பாகிஸ்தான் ராணுவத்தை பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இந்த ரயில் கடத்தல் சம்பவம் பிற்பகல் சிபி மாகாணத்திற்கு அருகில் நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 104 பயணிகளை மீட்க முடிந்தது. இன்னும் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில், 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலூச் விடுதலை இராணுவம் (BLA), பாகிஸ்தான் அரசாங்கம் பலூச் அரசியல் கைதிகள், ஆர்வலர்கள் மற்றும் இராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தனிநபர்களை விடுவிக்காவிட்டால், மீதமுள்ள பணயக்கைதிகளை தூக்கிலிடுவோம் என்று 48 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் எந்தவொரு இராணுவத் தலையீடும் அனைத்து பணயக்கைதிகளையும் தூக்கிலிடுவதற்கும், ரயில் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும் அந்தக் குழு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், பலூசிஸ்தானின் போலானில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தி, பணயக்கைதிகளாகப் பிடித்ததைக் காட்டும் வீடியோவை பலூச் விடுதலைப் படை (BLA) வெளியிட்டுள்ளது. பி நகரில் ரயிலுக்கு முன்னால் உள்ள தண்டவாளத்தில் வெடிப்பு ஏற்பட்டபோது, பெஷாவர் நோக்கிச் செல்லும் ரயில் காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. வெடிப்பு காரணமாக, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெடிப்புக்குப் பிறகு தண்டவாளத்தில் அடர்த்தியான புகை எழுவதை வீடியோ காட்டுகிறது. சிறிது நேரத்திலேயே, கைகளில் துப்பாக்கிகளுடன் கூடிய தீவிரவாதிகள் பணயக்கைதிகளாகப் பிடிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வீடியோ வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.