தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி நீரோடி வரை 18
மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான தடை காலம் நள்ளிரவு முதல்
தொடங்கியது. தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக் காலத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும்
இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 18 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளைப்
பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர். மேலும், சென்னை காசிமேட்டிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள், இன்று நள்ளிரவிற்குள் கரை திரும்ப வேண்டுமென காசிமேடு மீன்வளத்துறையின் இணை இயக்குநர் அஜய் ஆனந்த் விசைப்படகு உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே பல விசைப்படகுகள் காசிமேடு கடற்கரையில் வார்ப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.