திருப்பதி மலைக்கு செல்ல 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் பரவியது. எனவே, ஏராளமான பக்தர்கள் தொலைபேசி மூலம் தேவஸ்தான நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இந்த தடை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள முயன்றனர். இந்நிலையில், திருப்பதி மலையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனி ராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வாகனங்கள் திருப்பதி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரவிய தகவல் தவறானது என்று தெரிவித்தார்.
15 ஆண்டு பழமையான வாகனங்களில் வரும் பக்தர்கள் அந்த வாகனங்களை சாலையில்
ஓட்ட தேவையான தகுதி சான்றிதழ் வைத்திருந்தால் போதுமானது. தற்போதைய நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை திருப்பதி மலைக்கு ஓட்டி செல்ல அனுமதி வழங்கலாமா என்று தேவஸ்தானத்திடமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமும், போலீஸ் சார்பில் ஆலோசனை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.
எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி
இல்லை என்று பரவி வரும் தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கூறினார். மேலும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடமும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்ல 40 நிமிடமும் பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனை மிகவும் கண்டிப்புடன் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.