ரூ.12,000க்கு கீழ் உள்ள சீன போன்களை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் பிளேயர்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன… மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற உள்நாட்டு பிராண்டுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாடு புதிய முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.. 12,000 ரூபாய்க்கு குறைவான சீன போன்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது..
இந்நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து பேசிய போது ” ரூ.12,000க்கு கீழ் உள்ள சீன போன்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இந்திய பிராண்டுகளை உருவாக்குவது அரசின் கடமை ஆகும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் காரணமாக, இந்திய பிராண்டுகள் விலக்கப்பட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்போம்.
வெளிநாட்டு பிராண்டுகள் இந்தியாவை உலகளாவிய தளமாக தேர்வு செய்து இங்கிருந்து ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு பார்வை காரணமாக இந்தியா வலுவான, துடிப்பான மற்றும் புதுமையான எலக்ட்ரானிக்ஸ் சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது..” என்று தெரிவித்தார்..