138 சூதாட்ட செயலிகள், 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் செயலிகள் மூலமும் மக்கள் கடன்களை வாங்கி, பிறகு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கி அதற்கு வட்டி என்ற பெயரில், பல்வேறு நிபந்தனைகளை திணித்து பெரிய தொகையை கட்டுமாறு வற்புறுத்துகின்றனர். அவ்வாறு தவணையை செலுத்த மறுக்கும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர்.
இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.