குறைந்த விலை சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழக தீப்பெட்டி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்த விலை சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறைந்த விலையில் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உடனடியாக வெளிநாடுகளில் இருந்து லைட்டர்களை இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ரூபாய் 20-க்கும் குறைவான சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தேசிய தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருபது ரூபாய் விலை மதிப்பு கொண்ட லைட்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நலிந்து கிடக்கும் தொழிலை சுட்டிக்காட்டி டெல்லியில் மாநாடு நடத்தியதால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்துள்ளார்.