இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.
பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை நியமித்தது. இதனையடுத்து, தேர்தல் வரும் ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOC) அறிவித்தது.
அதன்பின், தேர்தலை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், அஸ்ஸாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் பேரில் மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு குவகாத்தி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், WFI தற்காலிக அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகம், விசாரணைக்கு அடுத்த தேதி நிர்ணயிக்கப்படும் வரை WFI இன் இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை ஜூலை 17ம் தேதிக்கு குவகாத்தி நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.