கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என அந்நாடு பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இதையடுத்து, கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேறவும் கனடா உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு பதிலடியாக, இந்தியாவில் இருந்து கனடா தூதரக மூத்த அதிகாரியை வெளியேற்றியது. கனடாவின் இந்த மோதல் போக்கால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கனடா நாட்டவருக்கான விசா வழங்கும் நடைமுறைகளை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக 1980கள் முதல் 1990கள் வரை ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 1990களில் காலிஸ்தான் இயக்கம் அழிக்கப்பட்டது.
இதனையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சமடைந்தனர். அங்கும் போய் காலிஸ்தான் தனிநாட்டுக்கான இயக்கங்களை இந்த பயங்கரவாதிகள் நடத்தினர். மேலும், இந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் காலிஸ்தான் இயக்கத்தை உருவாக்க முயற்சித்தனர்.
இப்படியான இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் புலிப் படை. இதன் தலைவரான நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதால் தற்போது இந்தியா – கனடா இடையே மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உலக நாடுகள் தற்போது நமது நாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றன.