கடந்த மாதம் கனமழையால் தத்தளித்த பெங்களூரு நகரத்தில், தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதன்கிழமை மாலை பெய்த கனமழையால் நகரின் கிழக்கு, தெற்கு, மத்திய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெலாந்தூர் ஐடி ஜோன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜாமஹால் குட்டஹல்லி பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அது பீக் அவர் என்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பலரும் வாகனங்களை அலுவலகங்களில் நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில் சேவையை நாடினர். இதனால், வழக்கத்தைவிட மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன.
கடந்த மாதம் பெங்களூருவில் ஏற்பட்ட திடீர் மழை வெள்ளத்தால் 3 நாட்களுக்கு தொடர்ந்து நகரமே ஸ்தம்பித்தது. பெங்களூருவில் ஐடி ஹப்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குடிநீர், மின் விநியோக சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்தனர். பல்வேறு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டு 1696 மில்லி மீட்டர் மழையளவே அதிகபட்சமாக இருந்த நிலையில், கடந்த மாதம் 1706 மில்லி மீட்டர் மழை பெய்தது. அந்த பாதிப்புகளில் இருந்து பெங்களூரு மீண்ட நிலையில் நேற்று மீண்டும் மழை பெய்ததோடு தற்போது அங்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.