பொதுவாகவே ஒரு நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகள் திவாலாகிறது என்றால், அந்நாடு பொருளாதார சிக்கலையோ நிதிநிலை நெருக்கடியையோ விரைவில் சந்திக்கப் போகிறது என்பதையே உணர்த்தும். அதிலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாகும் போது அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்று, முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும். அந்த வகையில், அமெரிக்காகவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் இன்னொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டிருப்பது,அமெரிக்க முதலீட்டு சந்தையையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், 175 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளது. சிக்னேச்சர் வங்கி சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளது.
இது ஒட்டு மொத்த நிதி சந்தைகளை மோசமான நிலைக்கு கொண்டு போகும் எனவும் 2008இல் உருவான சர்வதேச நிதி நெருக்கடிக்கு இது வழிவகுக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இதற்கு காரணமானவர்கள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள். சிலிக்கான் வேலி பேங்க் மற்றும் சிக்னேச்சர் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அனைவருக்கும் பணம் அளிக்கப்படும். பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் மீண்டும் இதே போன்ற நிலை மற்றொரு வங்கிக்கு உருவாகாது” என்றார்.