வங்கிகள், கணக்குகளை மோசடி என்று வகைப்படுத்தும் முன் கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கணக்குகளை ஒருதலைப்பட்சமாக மோசடி என்று வகைப்படுத்த வங்கிகளை அனுமதிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. மோசடிகளை வகைப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் சுற்றறிக்கையைப் பின்பற்றும் வங்கிகளுக்கு இது பெரும் பின்னடைவாகும். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி (ஐபிசி) விதிகள், முறைகேடுகள், போலியான பரிவர்த்தனை, ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மோசடி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வங்கித் துறையில் மோசடிகளைக் கண்டறிவதற்காக வெளியிடப்பட்ட முதன்மை சுற்றறிக்கையில் உள்ள விதிகளில் இயற்கை நீதியின் கொள்கைகள் படிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கடந்த 2020ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு , வங்கிகள், கணக்குகளை மோசடி என்று வகைப்படுத்தும் முன் கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஒரு கணக்கு மோசடி என வகைப்படுத்தப்படும் போது, அது கடன் வாங்கியவருக்கு சிவில் மற்றும் கிரிமினல் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும் மோசடி என அறிவிக்கும்போது முறையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கடன் வாங்குபவர் எந்தக் கிரெடிட்டையும் பெறாமல் “தடுப்புப் பட்டியலில்” சேர்ப்பதற்குச் சமம், எனவே மோசடி மீதான முதன்மை வழிகாட்டுதலின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கையின் கீழ் கடன் வாங்கியவர்களுக்கு விசாரணை நடத்த வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.