“நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்” என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “நீதித்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை, 10 ஆண்டுகலாக வழக்கறிஞராக இருப்பவர் சான்றழித்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது என்றும் அடுத்த முறை தொடங்கப்படும்போது, இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. அதேபோல், சிவில் நீதிபதிகள் தேர்வெழுதும் விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான விதிகளை அனைத்து மாநில அரசுகளும் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், நீதிபதிகளுக்கு சட்ட எழுத்தராக இருந்த அனுபவமும் கணக்கிடப்படும்” என்று நீதிபத்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்த உத்தரவில், “ஒருநாள் கூட வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் நடைமுறை கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால், இனி அப்படி கிடையாது. நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் முதல் பணி நாளில் இருந்தே சொத்துகள், வாழ்க்கை, சுதந்திரம் தொடர்பான வழக்குகள், வழக்கு நடத்துவோரின் நற்பெயர் ஆகியவற்றை கையாள வேண்டியுள்ளது. வழக்கறிஞராக பணியாற்றுவதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வெறும் சட்ட புத்தகத்தின் மூலம் கிடைக்கும் அறிவும், பயிற்சியும் கொடுத்து விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.