வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் தீவிபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி. இவரது வீட்டில் சிலிண்டர் மாற்றும் போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இன்று காலை திடீரென சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்போது, வீட்டில் இருந்த பார்த்தசாரதி, மனைவி தனலட்சுமி ஆகியோர் தீயில் சிக்கிக் கொண்டனர்.
மேலும், சிலிண்டர் டெலிவரி செய்ய வந்த ஏஜென்சி ஊழியர் அருண்குமார் என்பவருக்கு இந்த தீவிபத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அங்கிருந்த 3 பேரையும் மீட்டனர். பின்னர், பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.