வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்காவில், நைஜீரியாவின் அண்டை நாடான பெனினில், வணிக நிறுவனம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பற்றி அருகில் இருந்த கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வணிக நிறுவனம் ஒன்றில் பெட்ரோல் பாக்கெட்களை திறக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக பெனின் மேயர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெற்றதே விபத்திற்கு காரணம் என்று உள்ளூர் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.