கோடை காலத்தில் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கு தான் அதிக அளவில் தொற்றுக்கள் ஏற்படுகிறது. இதற்கிடையே, சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில், நீர்க்கடுப்பு என்கின்ற சிறுநீர்ப்பாதை தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் இரத்த நுண் சுத்திகரிப்பன்கள் உள்ளன. அங்கிருந்து உருவாகும் யூரிடர் என்கின்ற குழாய்கள் மூலம் சிறுநீர்ப்பையில் சேர்கின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீரகமாக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைதான் சிறுநீர் பாதை என்று சொல்கிறோம்.
இதில், ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்போது, சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களை தாக்கி பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கோடை காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படுகிறது. இதை தவிர்க்க தினமும் குறைந்தது 3- 4 லிட்டர் நீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்தலாம்.
அதேபோன்று, சிறுநீர் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித்தொற்று வராமல் தடுக்கலாம். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.