திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் அருண் (22). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புனித பியூலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது, 18 வயதாகும் பியூலாவுக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக தினமும் இரவில் காதல் மனைவிக்கு நுாடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்ற பாஸ்ட் புட் உணவுகளை அருண் வாங்கி கொடுத்துள்ளார்.
சமீப நாட்களாக பியூலாவுக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு கோமா நிலைக்கு சென்றார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், தொடர்ந்து பாஸ்ட் புட் உணவு சாப்பிட்டதால், கல்லீரல் முழுவதும் பாதித்துவிட்டது என்று கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. சிகிக்சை பலனின்றி புனித பியூலா உயிரிழந்தார். பாஸ்ட் புட் கலாசாரத்துக்கு இளம்பெண் பலியானது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரைக் கொல்லும் பாஸ்ட் புட் உணவுகள்..
துரித உணவில் உள்ள அதிக கொழுப்புகள் கடுமையாக இதயத்தை பாதிக்கும். உடனடி உணவுகள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரலை கடுமையாக பாதிக்கும். வீட்டில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை விட கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகள் ஊட்டச் சத்துக்கள் குறைந்தவை. துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சியைக் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் செய்கிறது.
துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும். தலைவலி மனச்சோர்வு, உடல் சோர்வு, எடை அதிகரிப்பு போன்றவையும் உண்டாகும். நொறுக்குத்தீனி துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.