கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாட்டில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஸ்ரீலட்சுமி என்பவர் பிறந்து 75 நாட்களே ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டுள்ளார். குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்ததைக் கவனித்த குழந்தையின் தாய், அது குறித்து ஷீபாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்குள் குழந்தைக்கு செவிலியர் காலி சிரஞ்ச் பயன்படுத்தி ஊசி போட்டுவிட்டார். இதனால் குழந்தையின் உடலில் காற்று செலுத்தப்பட்டது. இதையடுத்து, செவிலியர் ஷீபா, மருந்து நிரப்ப மறந்து விட்டேன் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினார். மருந்து எதுவுமில்லாமல் காற்றை உடலில் செலுத்தியதால் ஸ்ரீலட்சுமியின் குழந்தை அழுதபடி இருந்தது. இந்த விவரம் தெரிந்து சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த சுகாதாரத்துறையினர், பணியில் இருந்த செவிலியர்களான ஷீபா, லுர்த் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடந்ததால் ஷீபா கவனக்குறைவாக நடந்து கொண்டதை விசாரணையில் தெரிந்து கொண்டனர். குழந்தையின் உடலுக்குள் மிகக்குறைந்த அளவே காற்று நுழைந்துள்ளதால், குழந்தைக்கு உடல்நல பிரச்சனை எதுவும் ஏற்படாது என குழந்தையின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து, சம்பந்தப்பட்ட செவிலியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.