சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். மோசடியாக உங்கள் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது என்று மெசேஜ் வருகிறது. அதோடு ‘மேலும் தகவல்களுக்கு’ என்று ஒரு லிங்க் வருகிறது. அந்த லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் பணம் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
மேலும், தற்போது புதிய யுக்தியாக யூடியூப் வீடியோ க்ளிக்ஸ் என்ற முறையில் பார்-டைம் வேலை தேடுவோரை குறிவைத்து திருடர்கள் மோசடி செய்து வருகின்றனர். ஒருநாளைக்கு 2500 – 3900 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்கின்றனர். அப்படிப்பட்ட யுத்தியில் சிக்கிய குருகிராமைச் சேர்ந்த நபர், யூடியூப் வீடியோவை லைக் செய்யும் மோசடி கும்பலிடம் ரூ.42 லட்சத்தை இழந்துள்ளார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இவர், மனைவி கணக்கிலிருந்தும் பணத்தை ஏமார்ந்துள்ளார். இதனால், மோசடி கும்பலிடம் இருந்து மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.