மாநில அரசுகள் கொரோனா காலத்தில் இருந்ததை போல தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்டை நாடான சீனாவில் தற்போது எச்9என்2 எனும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நிமோனியா வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் எளிதாக தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் எச்9என்2 வகை நிமோனியா காய்ச்சல் பரவல் குறித்து சீனாவை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது. அதோடு இந்தியாவில் இந்த வகை பாதிப்பு இன்னும் கண்டறியப்படாத நிலையில் சீனாவில் இருந்து இங்கு பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சீனாவில் நிமோனியா வகை காய்ச்சல் பரவி வருகிறது. நமது நாட்டில் இந்த பாதிப்பு இன்னும் ஏற்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது தேவையான ஒன்றாகும். இதனால் மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் இருப்பு, பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள் போன்ற மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு வெண்டிலேட்டர் செயல்பாட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் கோவிட் 19 தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் திருத்தப்பட்ட கண்காணிப்பு யுக்திகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் சுவாச நோய்க்கிருமிகளின் (SARI) ஒருங்கிணைந்த கண்காணிப்பை அறிய உதவியாக இருக்கும். இந்த தரவுகள் IDSP-IHIP போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு குழந்தைகள், இளம் வயதினரை மாவட்ட வாரியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாசம் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.