மத்தியப்பிரதேசத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பகுதிகளைத் தவிர்க்கவும், பாதிக்கப்படக் கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும் மக்களை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 2ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழையுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “தீவிர மழைக்கு தயாராகுங்கள்..! ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஒடிசாவில் 204.4 மில்லிமீட்டர் அளவுக்கு அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருங்கள்.!” என்று தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட கனமழையால் ஒடிசாவில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.