நடன நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களை, ‘நாயை அடிப்பது போல் அடித்து சிறையில் போடுங்கள். அவர்களை ஜாமீனில் விடாதீர்கள்’ என மகாராஷ்டிரா மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் அப்துல் சத்தார், தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இதற்காக அவர் சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள சிலோட் என்ற இடத்தில் நாட்டுப்புற கலைஞர் கவுதமி பாட்டீலின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரின் நடனத்தை பார்க்க அந்த நிகழ்ச்சிக்கு 60,000 பேர் வந்திருந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது சிலர் மேடையில் ஏறி தகராறில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அப்துல் சத்தாரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டதால், அவர் எழுந்து மேடைக்கு சென்று மைக்கை வாங்கி தகராறில் ஈடுபவர்கள் மீது தடியடி நடத்தும்படியும், அவர்களது முதுகில் கடுமையாக அடித்து எலும்பை உடைக்கும்படியும் போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அதோடு அங்கே தகராறில் ஈடுபட்டவர்களைப் பார்த்து, “நீங்களெல்லாம் பேய்கள். உங்களுக்கு மனிதர்களைப்போல் நடந்து கொள்ளத்தெரியாது. இவர்களை நாயை அடிப்பது போல் அடித்து சிறையில் போடுங்கள். அவர்களை ஜாமீனில் விடாதீர்கள்” என்று பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதையடுத்து அமைச்சர் அப்துல் சத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், ”பிறந்த நாளில் நடனம் பார்க்க வந்தவர்களை நாயை அடிப்பது போல் அடிக்க போலீசாருக்கு அமைச்சர் அப்துல் சத்தார் உத்தரவிட்டு இருக்கிறார். அவர் அமைச்சரா? அல்லது கேங்ஸ்டரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது கருத்துக்கு அப்துல் சத்தார் வருத்தம் தெரிவித்துள்ளார். கிராமிய மொழியில் பேசி கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றேன். அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று விளக்கமளித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு இப்போது மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.