திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரபலமானவை. இதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான ஆய்வு அறிக்கையில், அந்த குற்றச்சாட்டு உறுதியானது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது. மேலும், அந்த நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் தான், திருப்பதி திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 236 கல்வெட்டுகள் பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை என்றும் 169 கல்வெட்டுகள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் என்றும் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் இருப்பதாகவும், மீதமுள்ள 1,100-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதில், சில கல்வெட்டுகளில் மன்னர்கள் தங்களின் பிறந்த நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் திருப்பதி கோவிலில் பூஜை செய்ய சொல்லும் போது, பெருமாளுக்கு படைக்கும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறை, அதில் சேர்க்க வேண்டிய பொருட்கள், அவற்றின் அளவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாம். பிரசாதங்களை தயாரிக்கும் சமையலறையின் சுத்தத்தையும், உணவு பொருட்களின் தரத்தையும், உணவு தயாரிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளதாக மைசூர் கல்வெட்டியல் துறை இயக்குநர் முனிரத்தினம் தெரிவித்துள்ளார்.
பிரசாதம் தயாரிப்பவர்களோ, அர்ச்சகர்களோ தவறு செய்தால், அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது இந்த கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. பழைய காலத்தில் கோவில் நகைகளில் முறைகேடு செய்த நபரும், உணவு தயாரிப்பில் முறைகேடு செய்தவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தலைமுறையினர், திருப்பதி ஏழுமலையான் கோவில் தொடர்பான பணிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இது சமூக அந்தஸ்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக அந்தக் காலத்தில் கருதப்பட்டதாம்.
திருப்பதி கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு அந்த காலத்தில் வழங்கப்பட்ட இந்த கடுமையான தண்டனைகள், ஏழுமலையான் கோவிலின் புனிதத்தன்மையை உறுதி செய்வதற்காக வரலாறு முழுவதும் கோயில் அதிகாரிகளால் பராமரிக்கப்படும் உயர் தரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. திருப்பதி லட்டுகள் தொடர்பான சர்ச்சைகளால், கோவிலின் தற்போதைய நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், வரலாற்று சான்றுகள் கோவிலின் பாதுகாவலர்கள் உணவு தயாரிப்பின் தரத்தை உறுதி செய்ய நீண்ட காலமாக தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
Read More : ’ஆசையா பேசுனாரு’… ’நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன்’..!! ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் கர்ப்பமான பிளஸ்2 மாணவி..!!