தான் இறந்ததாக நம்பவைக்க மற்றொரு பெண்ணை கொலை செய்து நாடகமாடிய பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பாத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் பாயல். இவருடைய காதலர் அஜய் தாகுர். சில தினங்களுக்கு முன்னர் பாயல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு அதனை தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், பாயல் வீட்டிலிருந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையே, நொய்டாவின் கவுர் பகுதியிலுள்ள மாலில் வேலை செய்யும் ஹேமலதா என்ற பெண்ணும் காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக, ஹேமலதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஹேமலதாவின் செல்போன் எண்ணின் கால் ஹிஸ்டரியை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், அஜய் தாகுரின் செல்போன் எண்ணும் இருந்தது. அஜயை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அஜய் தாகுர் ஹேமலதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ”பாயலின் பெற்றோர் கடனை கொடுக்க முடியாமல் தவித்துள்ளனர். அதனால், ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் பாயலின் பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து, பாயல் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ நினைத்துள்ளார். அதனால், தான் உயிரிழந்து விட்டதாக நம்ப வைப்பதற்காக அவரது உருவம் கொண்ட பெண்ணுடன் நட்பாக பழகி அவரை காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார். மேலும், அவரது முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி சிதைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை ஹூபோல் ஹாய் எனும் தொடரைப் பார்த்து செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.