கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சினேகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் மாண்டியாவின் நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, தினமும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து தங்களது வீடுகளில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு வீட்டார் சமதத்துடன் கடந்த ஆண்டு சினேகாவை பிரசாந்த் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமடைந்துள்ளதாகவும், தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கணவனிடம் கூறிவிட்டு சினேகா சென்றுள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து அவரது வீட்டிற்குத் தொடர்பு கொண்டபோது சினேகா அங்குச் செல்லவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், மனைவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் திருமணக் கோலத்தில் மனைவி சினேகா மற்றொரு வாலிபரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சினேகா குறித்து விசாரித்தபோதுதான் ஏற்கனவே இவருக்கு 2 திருமணம் நடந்தது என்றும் மூன்றாவதாக பிரசாந்தைத் திருமணம் செய்தது தெரியவந்தது. தற்போது 4-வதாக மற்றொரு வாலிபரைத் திருமணம் செய்துள்ளார்.
முதல் கணவரைப் பிரிந்த சினேகா, தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி அடுத்தடுத்து 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் சினேகாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.