கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக பரிஷத் அமைப்பினர் அங்குள்ள பப் ஒன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூர், பப் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. அங்கே ஏராளமான பப்களும் இரவு நேர பார்ட்டிகளும் வாடிக்கையாக நடக்கும். நேற்று பிரிகேட் சாலையில் உள்ள பப் ஒன்றில் இரவு நேர பார்ட்டி நள்ளிரவை கடந்தும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வந்த பரிஷத் அமைப்பினர் அந்தப் பப்பிற்குள் நுழைய முற்பட்டனர்.
இதனால் அவர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அந்தச் சம்பவம் பெரிய மோதலாக உருவெடுத்தது. இதனால அப்பகுதி முழுவதும் கலவரம் போல் காட்சியளித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த அசோக் நகர் காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.